உசிலம்பட்டி அருகே மழைநீர் செல்லும் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு இந்திரா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்களின் குடியிருப்புகள் உள்ளன.

இந்த இந்திரா நகர் காலணி பகுதி உருவாகும் போதே அவ்வழியாக செல்லும் மழைநீர் வடிகாலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இடம் ஒதுக்கீடு செய்த பின்னரே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்த காலத்தில் இந்த மழைநீர் வடிகால் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த தனிநபர்கள் தற்போது முழுமையாக மழைநீர் வடிகால்-யை ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளையும், சாக்கடை கால்வாய்களையும் மூடப்பட்டுள்ளதால் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் செல்ல முடியாத நிலை நீடித்து வருவதாகவும், இது குறித்து ஊராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் எனவும், முறையான சாக்கடை வடிகால்களையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.