• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
உலகப் பிரசித்தி இக்கோயிலில் கடந்த 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 11 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி 12ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நவகலச பூஜை, காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான ஷோடசா அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கலசாபிஷேகம் நடைபெற்றது. இதனை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ நடத்தினார்.
இதைத்தொடர்ந்து வைரகிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் உச்சி கால பூஜை, உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோயிலின் உள் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருதல் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேவசம் போர்டு இணை ஆணையர் பழனிகுமார், அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், திமுக மாவட்ட நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், எம்.ஹெச்.நிசார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.