சென்னை புறநகர் பகுதிகளில், திடீரென மாலை 3 மணி அளவில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து தத்தளித்தன.
அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள், அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னை விமான நிலைய பகுதியில், திடீர் சூறைக்காற்று, மழை காரணமாக, வருகை, புறப்பாடு 17 விமானங்கள், தாமதமாகி பயணிகள் அவதி.சென்னை புறநகர் பகுதிகளில் இன்று மாலை 3 மணியில் இருந்து திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதை அடுத்து அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்கள், சூறைக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்து தத்தளித்து கொண்டு இருந்தன. இலங்கையில் இருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதுரையிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள்,

மேலும் கோவை, தூத்துக்குடி, துர்காப்பூர், அந்தமான் ஆகிய 9 விமானங்கள், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக, வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. பின்பு சூறைக்காற்று மழை ஓய்ந்த பின்பு, விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க தொடங்கின.

அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான மும்பை, கொல்கத்தா, திருச்சி, ராஜமுந்திரி, மதுரை, புனே, கோவை, கவுகாத்தி ஆகிய 8 விமானங்கள், சூறைக்காற்று காரணமாக, சென்னையில் இருந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன. இதைப்போல் சென்னை விமான நிலைய பகுதியில் மாலை 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று, மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் 17 விமானங்கள் தாமதமாகி, பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
