திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் தான் உங்கள் தெருவின் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி தலைவர் பிடிவாதம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு ஆதரவாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சுகதேவ் தெருவைச் சேர்ந்த வினோத் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் பணிகளை;r செய்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து மிதுன் சக்கரவர்த்தி விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதனால் அதிருப்தியடைந்த வினோத் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மிதுன் சக்கரவர்த்தியிடம் இருந்து விலகினர். அத்துடன் அவர்கள் இருவரும் அவர்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மிதுன் சக்கரவர்த்தி, வினோத் வசிக்கும் வீட்டிற்கு முறையாக அனுமதி பெறாமல் சில பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி திமுக இளைஞரணி அமைப்பாளர் அருள்வாசகம் கூறுகையில், “பழனிசெட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வெற்றி பெற தீவிரமாக உழைத்தவர் வினோத். இந்நிலையில் மிதுன் காங்கிஸில் இணைந்ததால், அவரிடமிருந்து விலகி திமுகவில் வினோத் இணைந்துள்ளார். இதனால் அவர் காங்கிரஸில் சேர வேண்டும் என்று தொடர்ந்து அவருக்கு மிதுன் சக்கரவர்த்தி பல்வேறு இன்னல் கொடுத்து வருகிறார்.
பழனிசெட்டிப்பட்டியில் உள்ள 15 வார்டுகளில் சுகதேவ் தெருவை தரவி மற்ற அனைத்து பகுதிகளுக்கும் சிமெண்ட் சாலைவசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், சுகதேவ் தெருவில் மட்டும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டும் என்று கேட்பவர்களிடம் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேருங்கள் என்று பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படி சேர்ந்தால் தான் சுகதேவ் தெருவில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறி வருகிறார். எனவே, புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ள சுகதேவ் தெருவில் அனைத்து அடிப்படை பணிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து விளக்கம் கேட்க பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை