எனக்கு 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம்; இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறினார்.
லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சிம்பொனியை இசைஞானி இளையராஜா அரங்கேற்றினார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து வரவேற்றார்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “தனது வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆசிய கண்டத்துக்கே பெருமை சேர்த்து திரும்பியுள்ளார் இசைஞானி இளையராஜா. அவரை, தமிழக மக்கள் சார்பாக உரிய மரியாதையுடன் வரவேற்க முதல்வர் ஸ்டாலின் எனக்கு வலியுறுத்திக் கூறியிருந்தார். இன்று அரசின் சார்பாக நான் வந்துள்ளேன். மிகுந்த பெருமிதத்தோடு தமிழக மக்கள் சார்பில் நாம் அவரை வரவேற்கிறோம். நம் அனைவருக்கும் இளையராஜா ஒரு பெருமித அடையாளம்.” என்றார். மேலும் திமுக, பாஜக, விசிக கட்சி தலைவர்கள் இளையராஜாவிற்கு வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இளையராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னை நீங்கள் அனைவரும் மலர்ந்த முகத்தோடு வழியனுப்பி வைத்தீர்கள். அத்துடன் இறைவன் ஆசிர்வதித்தார். சிம்பொனி நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துத் திரும்பியுள்ளேன். இசைக் குறிப்பை யார் வேண்டுமானாலும் எழுதிடலாம். அவ்வாறாக எழுதிக் கொடுத்தால் அதை யார் வேண்டுமானாலும் வாசித்துவிடலாம். ஆனால், அதை வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் என்னவாகும். அப்படி ஆகிவிடாமல் லண்டனில் கண்டக்டர் மைக்கேல் டாம்ஸ் சிறப்பாகச் செய்துதந்தார்.
சிம்பொனியில் மொத்தம் 4 பகுதிகள். அந்த 4 மூவ்மென்ட் முடியும் வரை யாரும் கைதட்டக் கூடாது. அது விதிமுறை. ஆனால் அதற்கு மாறாக ரசிகர்கள் ஒவ்வொரு மூவ்மென்ட் முடிந்தபின்னர் கைதட்டி ஆச்சரியப்படுத்தினர். ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் போது கண்டக்டர் மைக் என்னைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரிப்பார். மேலும், சிம்பொனியின் இரண்டாவது பகுதியில் நான் இசையமைத்த சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. அதில் ஒரு பாடலை நான் அவர்களோடு இணைந்து பாடினேன். எனக்கு இங்கே எனது இசைக்குழுவுடன் பாடியே பழக்கம். அவர்களோடு பாடி எனக்குப் பழக்கமில்லை. ஆனால் அவர்களோடு பாடினேன். அது மிகவும் கடினம். அதற்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். இதை நான் அரங்கேற்றியது தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை. மேலும், முதல்வர் அரசு மரியாதையோடு வரவேற்றது நெகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல், தமிழக மக்களின் வாழ்த்தும், வரவேற்பும் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து, எனது கால்களில்தான் நான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம்; இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன். லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. சிம்பொனி இசையை நீங்கள் டவுன்லோடு செய்து கேட்கக் கூடாது. அதை அந்த இசைக்கலைஞர்கள் இசைக்க அமைதியான அரங்கில் நீங்கள் நேரடியாகக் கேட்க வேண்டும்.
என் மீது மக்களாகிய நீங்கள் அதீத அன்பு வைத்துள்ளீர்கள். என்னை, இசைக்கடவுள் எனக் கூறுகிறீர்கள். நான் சாதாரண மனிதன், என்னைப் பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை. சொல்லப்போனால் நீங்கள் என்னைக் கடவுள் என்று அழைக்கும்போது, கடவுளை ஏன் இளையராஜா அளவுக்கு இறக்குகிறார்கள் என்றே நினைப்பேன்” என்று கூறினார்.