கனடா நாட்டின் லிபரன் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டி;ன் புதிய பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பை ஏப்ரல் 2 வரை மட்டும் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். அதனால் கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி தேர்வாகியுள்ளளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அந்நாட்டு வங்கியின் 8வது ஆளுநராகவும், 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1 லட்சத்து 31ஆயிரத்து 674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீதமாகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (11,134 வாக்குகள்), கரினா கோல்ட் (4,785 வாக்குகள்), பிராங்க் பேலிஸ் (4,038 வாக்குகள்) பெற்றனர்.
கனடாவின் பிரதமராக தேர்வான பிறகு மார்க் கார்னி பேசுகையில், “டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. கனடா அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமலில்தான் இருக்கும்.” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்