அதிமுக சென்னை புறநகர் மாவட்ட சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நங்கநல்லூர் பெரியார் திடலில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நடிகை விந்தியா நடந்து கொண்டு உரையாற்றினார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவு அடைந்தவுடன் ஒரு சில நபர்களுக்கு மட்டும் நல உதவித் திட்டங்களை வழங்கிவிட்டு விந்தியா அங்கிருந்து புறப்பட்டார்.

அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக கூடியிருந்த பொதுமக்கள் ஒரே நேரத்தில் மேடையை நோக்கி வந்ததால் கடும் கூட்ட நெரிசலுடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது காவல்துறையினரும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.

விழா ஏற்பாட்டுளர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பவுன்சர்கள் கூட்டத்தில் இருந்த பெண்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். வயதான மூதாட்டிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் பணியில் இருந்த பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்ட மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி மேடைக்கு அனுப்பி வைத்தனர் அது மட்டும் இன்றி கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் விட்டால் போதும்டா சாமி என்ற அளவிற்கு சங்கடத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.
