வருகிற மே மாதம் சென்னையில் உள்ள செனாய் நகர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் லுலு ஹைபர் மார்க்கெட் திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்துக்;கு அதிக வருவாயை ஈட்டவும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்காகவும் பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்ட்ரல், ஷெனாய் நகர் ஆகிய இரண்டு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதை அடுத்து அவை விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரேஸ் சர்வீஸ் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இரண்டு இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தவிர, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் நிறைவடைய மேலும் மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் என்று மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு விடுதிகள், பிரபலமான ஜவுளி விற்பனை நிலையங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் போன்ற வசதிகளுடன் கூடிய ஹைப்பர் மார்க்கெட் இந்த இரண்டு மெட்ரோ நிலையங்களிலும் அமைந்துள்ளது. ஷெனாய் நகரில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் 1 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அடித்தளத்தில் செயல்படும் என்றும் அதில் 600 பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு ஒரு மினிப்ளெக்ஸ் இருக்கும்.
இது நகரத்தின் பிற வழக்கமான திரையரங்குகளைப் போலவே அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் 40,000 சதுர அடியில் அமையும், விம்கோ நகர் மெட்ரோவில் இது 60,000 சதுர அடியில் அமையும்.
“போதுமான பார்க்கிங் வசதிகள் மற்றும் இந்த இடத்தின் முக்கியத்துவத்துடன், லுலு ஹைப்பர் மார்க்கெட் செயல்பாட்டிற்கு வந்த பிறகு பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து சேவை மூலம் வருவாயைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு போக்குவரத்து சார்ந்த மேம்பாடு மூலம் அதிக வருவாயைப் பெறுவதில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆர்வமாக உள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை லிமிடெட் என்ற நிறுவனத்தையும் நிறுவியது.
இதன் ஒரு பகுதியாக, பிராட்வே, திருவொற்றியூர் மற்றும் பல இடங்களில் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.