சிவகாசி அருகே உள்ள மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து, “ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை என்ற பொருண்மையில் நிகழும் இந்த கருத்தரங்கில் பேசுவதற்கும், இலக்கிய வெளிச்சத்தில் உலகை காண்பது எப்படி என்ற ஒரு சில அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இந்த கருத்தரங்கம் மிகச் சிறந்த வாய்ப்பை தந்திருக்கிறது.
மனிதர்களினுடைய வாழ்க்கையிலிருந்து பெற்றதுதான் இலக்கியம். இலக்கியம் என்பது மனிதர்களுக்கு அப்பாற்பட்டது அல்ல.
இலக்கியம் என்பது கற்று அறிந்தவர்களுக்கும், அந்த துறை சார்ந்த அறிவு பெற்றவர்களுக்கும் மட்டுமல்ல, இலக்கியம் என்பது எல்லா தரப்பு மனிதர்களுக்கும் காலம் காலமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் மனிதர்களின் மிகப்பெரிய செல்வமாக கருதப்படுவது, கருத வேண்டியது கேள்விச் செல்வம் தான். மனிதர்களுக்கு இந்திய சராசரியின் படி 75 ஆண்டுகள் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்து முடிக்க வேண்டும். அவர் வாழ்ந்து முடிப்பதற்கு மிகப்பெரிய துன்பங்களை எதிர்கொண்டு தான் தன்னுடைய வாழ்வை முடிக்கின்றான். அந்த துன்பத்தில் இருந்து இரண்டு செய்திகளை; அவன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒன்று துன்பமில்லாமல் வாழ்வது எப்படி அல்லது துன்பம் வருகின்றபோது எதிர்கொள்வது எப்படி. இந்த இரண்டிற்கும் விடைகள் தான் ஒருவனுடைய வாழ்க்கை சக்கரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை ஒட்டி நடக்கக்கூடிய வாழ்க்கையில் இலக்கியம் எந்த இடத்தை பெறுகிறது என்ற கருத்து கேள்வியை முன்வைத்து அதற்கான விடையை தேடினால் அதற்கு இலக்கியம் மிகப்பெரிய வெளிச்சத்தை தரும்.
பூமியில் பிறக்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் மிகப்பெரிய வலிமை இருக்கிறது, அதில் ஆறறிவு உள்ள மனித இனம் பகுத்தறிவு ஆற்றலை பெற்றிருக்கின்றது. அந்த பகுத்தறிவு ஆற்றலின் வளர்ச்சி தான் அறிவியல் தொழில்நுட்பங்களோடு மனிதன் வாழ பழக்கப்பட்டது. பிறகுதான் மற்ற எல்லா உயிரினங்களையும் அவன் அடக்கி வாழ்வதற்கு வலிமை பெற்றான்.
பெரிய யானையைக் கூட மனிதனுடைய அறிவாற்றல், பகுத்தறிவு சிந்தனையால் அடக்கி ஆள்வதற்குரிய செல்வாக்கை மனிதன் பெறுகிறான். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்களுக்கு கூட இயற்கையின் வழியாக வரக்கூடிய மரபு சார்ந்த அறிவு, மற்ற உயிரினங்களை விட மனிதர்களுக்கு குறைவாக தான் இருக்கிறது.
மற்ற உயிரினங்களுக்கு அது இயல்பாகவே மரபு வழியாகவே இது போன்ற உயிர் பண்புகள் கடத்தப்படுகிறது. ஆனால் மனிதனுக்கான வாழ்க்கைத் திறன்கள் பொதுவாக இது போன்று மரபு வழியாக கடத்தப்படுவது இல்லை. அதனால் தான் மனிதன் அனுபவங்களை பெறுவதன் மூலமாக மட்டுமே தனக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களை எதிர்கொள்வதற்குரிய ஆற்றலை பெறுகிறான். இதுதான் மனிதனுடைய பரிமாண வளர்ச்சி விதி.
மனிதன் தான் வாழ்ந்து முடிக்க வேண்டிய வாழ்க்கையில் அவருக்கான துன்பங்களை எதிர்கொள்வதற்கு நிறைய அனுபவங்கள் தேவைப்படுகிறது. அந்த அனுபவங்களை இரண்டு வகைகளில் அவன் பெற்றுக் கொள்ள முடியும். ஒன்று எந்த ஒன்றையும் தானாக செய்து பார்த்து, நன்மையோ தீமையோ, வெற்றியோ தோல்வியோ என அறிந்து, அதன் மூலமாக வரக்கூடிய அளவுகோலை வைத்து அடுத்த சிறப்பாக செயல்படுவது.
இன்னொன்று அடுத்தவர்களுடைய அனுபவங்களின் மூலமாக கற்றுக்கொள்வது. இந்த இரண்டாவது வாய்ப்பை இரண்டு வழிகளில் நாம் கற்றுக் கொள்ளலாம். ஒன்று பாடத்திட்டங்களில் கல்லூரிகளின் வழியாக நமக்கு சொல்லித் தரப்படுவது. மற்றொன்று மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ளக்கூடியவை. அந்த இரண்டாவது வகையில் இருக்கக்கூடிய மனிதர்களுடைய வாழ்க்கை அனுபவங்களை நமக்கு சொல்லித் தருவது தான் இலக்கியம்.
நாம் வாழக்கூடிய இந்த தரிசு பூமியில் கடந்த ஒரு 200 ஆண்டுகளாக நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் எச்சங்கள் மிச்சங்கள் நமக்கு என்ன சொல்லப்படுகின்றன என்பதையெல்லாம், இலக்கியத்தின் வழியாக பார்த்தால் நாம் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய முன்னோர்கள் அனுபவித்த துன்பங்கள் என்னென்ன, அவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு என்னென்ன செய்ய முடியும் என்பதையெல்லாம் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பகுதியினுடைய தட்பவெட்ப, பொருளாதார வளர்ச்சி, உணவு தன்னிறைவு, விவசாயம் எப்படி இருந்தது என்பதை எல்லாம் நீங்கள் வாய்மொழி இலக்கியங்கள் வழியாகவே அறிந்து கொள்ள முடியும்.

இப்பகுதியில் 1870-80 களில் ஏற்பட்ட தாதுவருட பஞ்சத்தின் வரலாற்றைப் பார்த்தால், நாம் எத்தகைய உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். எழுதி வைத்திருக்க கூடிய இலக்கியங்களை பார்த்தால் இந்த பகுதி மக்கள் எவ்வளவு ஒரு கடினமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கரிசல் இலக்கிய திருவிழாவிற்காக இந்த பகுதியில் இருக்கக்கூடிய நாட்டுப்புறப் பாடல்களை எல்லாம் ஆவணப்படுத்தும் போது, நிறைய நாட்டுப்புற பாடல்கள் இன்னும் பதிவு செய்யப்படாத இலக்கியங்களாக இருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் இன்றைக்கு மென்மேலும் கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் வாழ்வியல் அனுபவங்கள் இருக்கின்றனவா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
எனவே இலக்கியம் என்பது நாம் எழுதி வைத்திருக்க கூடிய அல்லது உயர்ந்த மொழிகளில் சொல்லப்படக்கூடிய இலக்கணச் சொந்தத்தோடு இருக்கக்கூடிய இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையில் பதிவு செய்யப்படாமல் இருக்கக்கூடிய வாழ்க்கை அனுபவங்களும் தான்.
நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரக்கணக்கான சொல்லப்படாத கதைகள் இருக்கின்றது. ஒவ்வொருவருக்குள் எழுதி முடிக்கப்படாத குறுங்கதைகள், காவியங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் எழுதுவதற்கும் அவற்றை எல்லாம் ஆவணப்படுத்துவதற்கும் நாம் பழகிக்கொண்டால் அடுத்த தலைமுறைக்கு அது ஒரு வழிகாட்டியாக இருக்கும் எனவும், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், புறனானூறு உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் நமக்கு எவ்வாறு வாழ்வில் துணை புரிகின்றன. அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள் குறித்து உதாரணங்கள், பாடல்கள் மூலம் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




