590 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியும் இதுவரை மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி, மத்திய அரசின் பொதுத்துறை சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக ஒன்றிய அரசு 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன் விரிவாக்க பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 570 விவசாயிகளிடம் 620 ஏக்கர் நிலங்கள் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கினாலும் நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து இழப்பீட்டு தொகை வழங்க காலதாமதம் செய்த சி பி சி எல் நிறுவனம், மத்திய அரசு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து கடந்த மே மாதம் 11 நாட்கள் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ஜானிடாம்வர்கீஸ் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதிக்குள் மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதுவரை வழங்காத காரணத்தால் ஆத்திரமடைந்த நரிமணம், பனங்குடி, கோபுராஜபுரம் ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை முதல் பனங்குடி கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை நில எடுப்பு ஆணையரிடம் உள்ள தங்களின் கோப்புகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு தொகை விரைந்து கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிலங்களை கொடுத்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள் அன்றாட செலவினங்களுக்கு யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வருகின்ற மூன்றாம் தேதி தமிழக முதல்வர் நாகை வர உள்ள நிலையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வேலையில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.