பெரியாறு அணைக்குச் செல்ல கேரள நீர்வளத் துறைக்கு புதிய படகு – அமைச்சர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக செல்ல கேரள நீர்வளத் துறைக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட புதிய படகை கேரள
நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் இன்று மாலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முல்லைப் பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2014 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், அணைப்பகுதியில் எந்த ஒரு வழக்கமான மராமத்து பணிகள் செய்வதாக இருந்தாலும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் செய்ய வேண்டும் என்ற காரணத்தால், கேரள நீர்வளத்துறை அதிகாரிகளும் பெரியாறு அணைக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் கேரள அதிகாரிகள் தேக்கடி படகுத்துறையில் இருந்து நீர்வழிப் பாதையில் அணைப்பகுதிக்கு வந்து செல்வதற்கு அவர்களுக்கு இருந்த படகு பழுதாகியதால், அணைப்பகுதிக்கு குறிப்பிட்ட நேரங்களில் செல்ல முடியவில்லை எனவும், அதனால் கேரள நீர்வளத் துறைக்கு புதிய படகு வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, கேரள நீர்வளத் துறைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 12 லட்சத்தில் “ஜல ஜீவன்” என்ற புதிய படகு வாங்கப்பட்டது. இந்த புதிய படகை கேரள நீர்வளத் துறை வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தேக்கடி படகு துறையில் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கலந்து கொண்டு கொடியசைத்து அதிகாரிகளின் படகு சவாரியை துவக்கி வைத்தார்.
விழாவில் பீர்மேடு எம்எல்ஏ வாழூர் சோமன், குமளி பஞ்சாயத்து தலைவர் டெய்சி செபாஸ்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராரிச்சன் மற்றும் குமுளி பஞ்சாயத்து பிரதிநிதிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் குறுகையில், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு செல்வதற்காக இருந்த படகு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. அதன் பிறகு அந்தப் படகு இயக்கப்படவில்லை. இதனால் அதன் பின்னர், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், கண்காணிப்புப் பணிக்காக அணைக்குச் செல்ல கேரள காவல்துறை மற்றும் வனத்துறையினரின் படகுகளை நம்பி இருந்தனர். இது அதிகாரிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் புதிய படகுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கேரள நீர்வளத் துறைக்கே வழங்கப்பட்டுள்ள 10 பேர் பயணிக்கும் இந்தப் படகில் தேக்கடி படகுத்துறையிலிருந்து முல்லைப் பெரியாறு அணையை 45 நிமிடங்களில் கேரள அதிகாரிகள் அடையலாம் என்றார்.