எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சரும். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான
ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில். நான் என்னை அழைத்துக் கொண்டு போய் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்க்க வேண்டும் என்று சொன்னதே கிடையாது எனவும், ஆர்.பி. உதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி தந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ” ஓபிஎஸ்க்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன், ஏன் என்று சொன்னால், அவர் சொல்வ தெல்லாம் உண்மை என்று மக்களிடத்திலே அந்த செய்தி சென்று விடக்கூடாது. அம்மா அவர்கள் எனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். அம்மா அவர்கள் நம்மோடு இருந்த போது இதே தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010|-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா அவர்கள், சாமானிய தொண்டரான இந்த உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்கள்.
அன்று முதல் அவர் என்னென்ன நடவடிக்கைகளை தன் அதிகாரத்திற்கு போட்டியாகவோ, இணையாகவோ, துணையாகவோ, அல்லது பின்னாலோ, முன்னாலோ எந்த வடிவத்திலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் எடுத்து வைத்த முயற்சிகள் எல்லாம் அவருடைய மனசாட்சிக்கு தெய்வ சாட்சியாக விட்டுவிடுகிறேன். அதே 2010-ம் ஆண்டு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலே செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிற போது இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா அவர்கள், அந்த செயல் கூட்டத்தில் கலந்து கொள்ள, தேனி மாவட்டத்துடன் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்கு இந்த சாமானிய தொண்டன் உதயகுமாருக்கு ஆணையிட்டார்கள் என்பதும் அந்த வரலாறையும் அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
நாடாளுமன்றத்தில் வெற்றிக்காக எனக்கு பணியாற்றுகிற வாய்ப்பு கிடைக்கிற போது தலைமைக்கும், இரட்டை இலை விசுவாசமாக நான் பணியாற்றி, தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்பு நலிவு போகிற போது தேனி மாவட்டத்தில் இரட்டை இலை மலர்ந்தது அதற்கு இந்த சாமானிய தொண்டனுடைய அந்த விசுவாசமான உழைப்பு எப்படி என்பதை நீங்கள் வேண்டுமானால் உங்கள் வசதிக்காக மறந்து இருக்கலாம் அல்லது மறைக்க முயற்சிக்கலாம் உங்களுக்கு நேரம் கிடைத்தால் மனசாட்சி இருந்தால் எளிய தொண்டனிடம் விசாரித்து பாருங்கள் நான் விசுவாசத்தோடு இரட்டை இலை சின்னத்திற்காக எப்படி உழைத்தேன் என்பதையும், எப்படி பாடுபட்டேன் என்பதையும் அந்த தொண்டர்கள் சான்றாக சொல்வார்கள்.
சத்தியம் செய்து இப்போதும் சொல்கிறேன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி உழைத்து வளர்த்து, இன்னைக்கு மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தின் வழிநடத்தி வரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணையிட்டால் இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்கவில்லை. ஏன் இதை சொல்லுகிறேன் என்று சொன்னால் நான் பதவிற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஒரு நாளும் ஒருபோதும் ஆசைப்பட்டவன் அல்ல. இந்த பொறுப்புகள் எல்லாம் விசுவாசத்தோடு நான் பணியாற்றவைக்காக தலைமை என்னை தேடிக் கொடுத்த பதவிகள் தானே தவிர அங்கீகாரம் தவிர, நான் தேடிப்போய் பெற்ற பதவிகள் அல்ல என்பதை இந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் கழக தொண்டர்களுக்கும் நான் விளக்கம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்களைப் போன்று அதிகாரத்திற்காக, பதவிக்காக செயல் நடவடிக்கையில் நின்றது இல்லை பதவிக்காக, அதிகாரத்திற்காக, கட்சிக்கும் தலைமைக்கும் என்றைக்கும் மாற்று சிந்தனையோ, எதிர் சிந்தனையோ கொண்டவன் இல்லை இந்த உதயகுமார் என்பது கழகத் தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்றாக தெரியும்” என்று பேசியுள்ளார்.