அமெரிக்காவில் கூட பிரதமர் நரேந்திர மோடி அதானியின் ஊழலை மறைத்துள்ளார் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற நிலையில், அந்நாட்டு அதிபர் டிரம்புடன் இது குறித்து பேசவில்லை என தெரிவித்தார். இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இல்லை என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தக் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இந்தியாவில் நீங்கள் கேள்வி எழுப்பினால், மவுனமே பதிலாக இருக்கும். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விவகாரமாகி விடும். அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் நண்பரின் (கவுதம் அதானி) பாக்கெட்டை நிரப்புவது தான் மோடிக்கு நாட்டைக் கட்டியெழுப்புவது என்றால், லஞ்சம் வாங்கிக் கொண்டு நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது தனிப்பட்ட விஷயமாக மாறிவிடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.





