சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க் பார்ட் நகருக்கு செல்லும், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், 6 மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனதால், ஜெர்மன், லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து பயணிகள் 324 பேர், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.
எதிர் முனையில் வரும் விமானம் தாமதம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்படும் விமானமும் தாமதம் ஆனதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல்.
ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க் பார்ட் நகரில் இருந்து, சென்னைக்கு நள்ளிரவு 12 மணிக்கு, லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 1.45 மணிக்கு, ஃபிராங்க் பார்ட் நகருக்கு புறப்பட்டு செல்லும். அதைப்போல் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட இருந்த அந்த விமானத்தில் பயணிக்க, 326 பயணிகள் இருந்தனர்.
ஆனால் நள்ளிரவு 12 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய அந்த விமானம் வரவில்லை. சுமார் 6 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 5.45 மணிக்கு 320 பயணிகளுடன், சென்னைக்கு வந்தது. அதன் பின்பு அந்த விமானம் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இன்று காலை 8.10 மணிக்கு, சென்னையில் இருந்து ஃபிராங்க் பார்ட் நகருக்கு, 326 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட இடங்களுக்கு இணைப்பு விமானமாக இருப்பதால், ஜெர்மன் பயணிகள் மட்டுமின்றி, லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து பயணிகளும், விமானம் தாமதம் ஆனதால், 6 மணி நேரத்திற்கு மேலாக சென்னையில் தவித்தனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், எதிர் முனையில் ஃபிராங்க் பார்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானம் தாமதமாக வந்ததன் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானமும் தாமதம் ஆகியது. விமானம் தாமதம் குறித்து, ஏற்கனவே பயணிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் தகவல் கிடைக்காதவர்கள், வெளியூர் பயணிகள் முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டதால், அவர்களுக்கு ஹோட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் அந்த விமான நிறுவனம் செய்திருந்தது என்று கூறுகின்றனர்.