வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.
பாடியவர்: ஓதலாந்தையார்.
திணை: முல்லை
பாடலின் பின்னணி:
கார்காலம் ஆரம்பிக்குமுன் தான் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் தொடங்கிய பிறகும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துவாள் என்று தோழி எண்ணுகிறாள். தலைவியோ, ”இந்தக் காட்டைப் பார்த்தால் கார்காலம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது. ஆனால், நான் அதை நம்ப மாட்டேன். இன்னும் கார்காலம் வரவில்லை. கார்காலம் வந்திருந்தால், என் தலைவர் இந்நேரம் திரும்பி வந்திருப்பார். அவர் பொய் கூறாதவர்.“ என்று தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
வண்டுகள் தேன் உண்ணுதற்கு வருமாறு, தழைகளின் இடையே நீண்ட, புதிய சரக்கொன்றைப் பூங்கொத்துகள் செறிந்து மலர்ந்து, உள்ளன. அவை பொன்னால் செய்த அணிகலன்களைத் தங்கள் தலைகளில் கோத்துக் கட்டிய, மகளிருடைய கூந்தலைப் போலத் தோன்றுகின்றன. புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய காடானது, இது கார்ப் பருவமென்று தெரிவித்தாலும், நான் அதை நம்பமாட்டேன். ஏனென்றால், என் தலைவர் பொய் கூறாதவர்.