• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மூன்று நாள் தான் கெடு – தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கெடு

ByP.Kavitha Kumar

Feb 7, 2025

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் பயணம் செய்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வேலை செய்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு பெண்களுக்கான தனி ரயில் பெட்டியில் பயணம் செய்துள்ளார். இந்த பெட்டியில் ஆண் பயணிகள் பயணம் செய்யக் கூடாது என்ற ரயில் பயண விதிமுறைகள் இருந்தும், அதனை மீறி பயணித்த இரண்டு ஆண்கள், பெண்கள் பெட்டியில் ஏறி, அதில் பயணித்து கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.

இதனால் அந்த பெண் கூச்சலிட்டவுடன், ஓடும் ரயிலிலிருந்து அப்பெண்ணை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், படுகாயங்களோடு பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தேசிய மகளிர் ஆணையம், ரயிலில் மகளிருக்கென ஒதுக்கப்பட்ட தனிப் பெட்டியில் பயணித்த பெண்ணுக்கு ஆண் பயணி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தமிழக காவல் துறை தலைவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு, உரிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை உட்பட விரிவான விவரங்கள் அடங்கிய அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.