• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சத்குரு குருகுல மாணவர்கள் வல்லமை பெற்றவர்கள்!

BySeenu

Jan 17, 2025

சத்குரு குருகுல மாணவர்கள் ஓதுவார்கள் போல் தேவாரம் பாடும் வல்லமை பெற்றவர்கள்! பேரூர் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார்.

கோவை சத்குரு குருகுல மாணவர்கள் ஓதுவார்கள் பாடுவதைப் போல் அழகாக தேவாரம் பாடும் வல்லமை பெற்றவர்கள் என பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் பாராட்டு தெரிவித்தார்.

பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தேவாரம் எனும் அற்புத கொடையை நமக்கு அருளிச் சென்ற ‘தேவார நாயன்மார்களுக்கு’ நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் சத்குருவின் வழிக்காட்டுதலில், சமஸ்கிருதி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் “தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு” நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.

இதன் முதல் நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் அவர்களின் முன்னிலையில் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் இன்று (17/01/2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய மருதாசல அடிகளார் அவர்கள், ”சத்குரு அவர்களுக்கு பாரம்பரியமாக இருக்கக்கூடிய கலைகளை, வித்தைகளை பேண வேண்டும் என்பது நல்லதொரு எண்ணம். அந்த அடிப்படையில் இங்கே இந்த குழந்தைகள் தேவாரத்தை அருமையான முறையில், நம்முடைய ஓதுவார் மூர்த்திகள் எப்படி பாடுகின்றாரோ அது போன்று அழகாக பாடக்கூடிய வல்லமை பெற்றவர்கள்.

இந்த ஒரு கலை மட்டுமல்லாமல், நம்முடைய பழமை மிகுந்த கலைகள் அனைத்தையும் குழந்தைகளுக்கு சத்குரு கற்றுத்தருகின்றார். அது எதற்காக? நம்முடைய பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்காக. அந்த வகையிலே இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்து கொடுத்த அனைத்து அன்பர்களுக்கும், பெருமக்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.” எனக் கூறினார்.

இதில் பங்கேற்ற சத்குரு குருகுல மாணவர்கள் பல்வேறு தேவாரப் பாடல்களை பாடினர். இதனிடையே திருஞானசம்பந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கதையாடல் மூலம் மாணவர்கள் விவரித்தனர். இதில் பேரூர் ஆதீன மடத்தின் மாணவர்கள், பக்தர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி பள்ளியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் மொத்தம் 4 குழுக்களாக பிரிந்து சென்று இந்த தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

பேரூர் ஆதீனத்தை தொடர்ந்து ஜனவரி 18-ஆம் தேதி காமாட்சி புரம் ஆதீனம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் மற்றும் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதே போல் ஜனவரி 19-ஆம் தேதி சிரவை ஆதீனம், மயிலை கபாலீஸ்வரர் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர், திருவானைக்கால் ஜம்புகேஸ்வரர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், ஜனவரி 20-ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சத்குரு தேவாரப் பாடல்களின் மகத்துவத்தை குறிப்பிட்டு பல்வேறு தருணங்களில் பேசியுள்ளார். குறிப்பாக “தமிழ் கலாச்சாரம் என்பது அடிப்படையாக பக்தியை மூலமாக வைத்து வளர்ந்த கலாச்சாரம். பக்தி என்றால் எல்லையில்லாத ஈடுபாடு. திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் இது போல பல மகான்கள் பக்தி பரவசத்தில் உருவாக்கிய கலாச்சாரம் இந்த தமிழ் மண்ணில் சேர்ந்திருக்கிறது. இந்த பக்தியின் வெளிப்பாடாக தமிழ் மண்ணில் தேவாரம் வெளிப்பட்டது. இதை அனைவரும் கேட்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

நம் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக தேவார திருமுறைகள் சிவ பக்தர்களாலும், ஓதுவார்களாலும் கோவில்கள் தோறும் பாடப்பட்டு வந்துள்ளது.
அந்த மரபின் தொடர்ச்சியாக சத்குரு குருகுலத்தின் ஒரு அங்கமான சம்ஸ்கிருதி பள்ளியில் மாணவர்களுக்கு சிறுவயது முதலே தேவாரப் பாடல்கள் பாரம்பரிய முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.