இணையதளத்தில் ஒருவர் தனக்கும், தன் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக பிரபல நடிகை நிதி அகர்வால் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘கலக தலைவன்’, ஜெயம் ரவியுடன் ‘பூமி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ மற்றும் பவன் கல்யாணுடன் ‘ஹரி ஹர வீர மல்லு’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், இணையதளத்தில் ஒருவர் தனக்கும், தன் குடும்பத்திற்கும் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாக சைபர் க்ரைம் போலீசில் நடிகை நிதி அகர்வால் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் என்னையும், எனது குடும்பத்தினரையும் குறிவைத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால், மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறேன். எனவே அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அவரது புகார் குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரபல நடிகை போலீசில் மிரட்டல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.