அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக வழக்கில் தேர்தல் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் ஆணை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தேர்தலை ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தான் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது என ரவீந்திரநாத், கே.சி.பழனிசாமி ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவில் வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்தல் ஆணையம் இந்த வழக்கை விசாரணை நடத்தக் கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரியமான் சுந்தரம் வாதங்களை முன்வைத்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடைவிதித்து, ஜனவரி 27-ம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.