மத்திய அரசின் 100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தாய் அன்னம்மாள் மனு கொடுக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்கள், பெண்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. கடந்த 2013 -14 ஆம் நிதியாண்டில் இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ஒருநாள் ஊதியம் ரூ.155 ஆக இருந்தது. தற்போது ஊதியம் ரூ.279 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 100 நாட்கள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் அன்னம்மாள் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் என்பதுதான் சீமானின் சொந்த ஊர் ஆகும். இங்கு சீமானின் தாய் அன்னம்மாள் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை அரணையூர் கிராம மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு மீண்டும் 100 நாள் வேலை அளிக்க வேண்டும் என்றுகூறி அரணையூர் கிராம மக்கள், இளையான்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி மனு அளித்தனர். அப்போது அவர்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் அன்னம்மாளும் வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சின்னம் பொறித்த பொலிரோ காரில் அன்னம்மாள் ஏறிச் சென்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தை சீமான் எதிர்த்து வரும் நிலையில், அவரது தாய் அந்த திட்டத்தில் வேலை கேட்ட விவகாரம் நாம் தமிழர் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








