வீடியோ, ஆடியோ டப்பிங் மற்றும் நவீன வகை போட்காஸ்ட் ஸ்டுடியோ உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கப்பட்ட பாசிபிள் ஸ்டுடியோவை பிரபல நடிகர் ரியோ திறந்து வைத்தார்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.
முன்னனி ஐ.டி.மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திரைப்படம் மற்றும் அது தொடர்பான ஊடக தொழில் நுட்ப ஸ்டுடியோக்களும் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாசிபிள் ஸ்டுடியோ புதிய வீடியோ,ஆடியோ தொழில் நுட்பம் தொடர்பாக துவங்கப்பட்டது. இதற்கான துவக்க விழாவில் பிரபல நடிகர் ரியோ கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
திரைப்படம், சின்னத்திரை போன்றவற்றை தாண்டி தற்போது அதிகரித்து வரும் யூ டியூப் போன்ற சமூக வலை தளங்களில் தங்களை பிரபலபடுத்த நினைப்பவர்களுக்கும்,
அதே நேரத்தில் தேர்ந்த நுட்பமான தொழில் நுட்பத்தில் தங்களது வீடியோ மற்றும் ஆடியோக்களை டப்பிங், எடிட்டிங் செய்து முழு வீடியோவாக தயாரித்து வழங்கும் வகையில் இந்த ஸ்டுடியோவில் வசதிகள் இருப்பதாக இதன் நிர்வாக இயக்குனர் சரிகா கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஸ்டுடிவோவின் தொழில் நுட்ப இயக்குனர் பிரபு மணிகண்டன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரியோ கோவையில் திரைப்படம் தொடர்பான கலைஞர்கள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற ஸ்டுடியோக்களை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.