மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலைய வணிக வளாகம் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில் சுமார் 20% பேருந்துகளே பேருந்து நிலையத்திற்குள் வருவதால் பேருந்து நிலைய வணிக வளாக கட்டடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறை சில தினங்களாக சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக மாறி வருகிறது. இதன் அருகிலேயே மது பிரியர்கள் மது அருந்தி வருவதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சோழவந்தான் காவல்துறையினருக்கும், போக்குவரத்துதுறை அதிகாரிகளுக்கும் போன் மூலமும், மனு மூலமும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரிய அசபாவித சம்பவங்கள் நடந்தால் நடவடிக்கை எடுப்பார்களோ, என்னவோ என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கட்டிடங்களின் மாடிப்படிகளில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதும் போதை தலைக்கேறியதும் படிகளிலேயே படுத்து உறங்குவதுமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆகையால் இது குறித்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், போக்குவரத்து மதுரை மண்டல மேலாளரும் நேரில் ஆய்வு செய்து உடனடியாக பேருந்து நிலையத்தில் புற காவல் நிலையம் அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
