பாலமேடு அருகே வலையப்பட்டி ஊராட்சியில் மயானம் அமைக்கும் பணிகள் தொடங்கின. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வலையப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கான மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை மஞ்சமலை ஆற்றில் புதைக்கவும், எரிக்கவும் செய்வதாகவும் ஆகையால் உடனடியாக மயானம் அமைத்து தர வேண்டுமென சில தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி பஞ்சமி நில மீட்பு உரிமை இயக்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் அருள் மொழியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ஆதிதிராவிட மக்களின் கோரிக்கையை ஏற்று வளையப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மயானம் அமைக்கும் பணிகளை தொடங்கினர். ஆதிதிராவிட மக்களின் கோரிக்கை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
