சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளியில் மின் கட்டணம் கட்டாததால் 30 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி அவதிப்படும் மாணவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகள் இன்றி 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்கு உள்ள பள்ளி நிர்வாகத்திற்கும் உறவின் முறைக்கும் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்ற மாதம் வரை மின்சாரம் கட்டி வந்த உறவின்முறை நிர்வாகத்தினர் மின்கட்டணம் செலுத்தாததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சோழவந்தான் மின் வாரிய பணியாளர்கள் காமராஜர் நடுநிலைப் பள்ளியில் மின்சாரத்தை துண்டித்து விட்டு சென்றனர்.


இதனால் வகுப்பறை முழுவதும் இருட்டான நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் மதிய உணவு இடைவேளை மற்றும் கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு தண்ணீர் இல்லாததால் மாணவர்களின் உடல் நலமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடமும் உறவின்முறை நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆகையால் மாவட்ட கல்வி அலுவலர் இந்த பள்ளியை நேரில் ஆய்வு செய்து பள்ளியில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஒரு அவசர மருத்துவ முகாமை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் மாவட்ட நிர்வாகம் இந்த பள்ளியை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளியில் ஒரு மாதத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாத நிலையில் மாணவர்கள் சிரமப்பட்டு வரும் நிகழ்வு இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





