• Tue. Apr 30th, 2024

“நம்மை காக்கும் 48” – தமிழக அரசின் புதிய திட்டம்

Byமதி

Nov 19, 2021

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவியை அரசே மேற்கொள்ளும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், விபத்துக்களைக் குறைப்பதற்கும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், சாலைகளின் வடிவமைப்பு, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், “பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய ‘சாலைப் பாதுகாப்பு ஆணையம்’ என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சாலைப் பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிர்வாக, நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படும்.

சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணவும், புதிய தொழில் நுட்பத்தோடு அதனை சரிசெய்து, தொலைநோக்கு திட்டத்துடன் விபத்துகளை தவிர்ப்பதுமே இதன் முதன்மையான இலக்காகும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், “நம்மை காக்கும் 48 – அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்” செயல்படுத்தப்படும்.

இதற்காக மொத்தம் 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவருக்கும் இந்த திட்டத்தின்கீழ் மருத்துவம் செய்யப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன.

இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *