• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெறிச்சோடிய கடைவீதிகள் வர்த்தகர்கள் கவலை

ByKalamegam Viswanathan

Oct 30, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வியாபாரம் மந்த நிலையில் உள்ளதால் மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடைவீதிகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சோழவந்தானில் பெரிய கடை வீதி, மார்க்கெட் ரோடு, சின்ன கடைவீதி, திரௌபதி அம்மன் கோவில் தெரு, வட்ட பிள்ளையார் கோவில் பகுதி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதி, மருது மஹால் பகுதி, வடக்கு ரத வீதி போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தீபாவளிக்காக முதலீடு செய்துள்ள வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் ஆகியோர் மிகுந்த கவலைக்கு உள்ளாகி உள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்.., எப்போதும் சோழவந்தானில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக சோழவந்தான் பகுதிக்கு பொதுமக்கள் அதிகம் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஏனோ பொதுமக்களின் வருகை குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கையால் ஆக்கிரப்புகள் அகற்றப்பட்ட போது, பல இடங்களில் கடைகளின் முன்புறம் இருந்த படிக்கட்டுகள் அகற்றப்பட்டு அப்படியே விட்டுச் சென்று விட்டனர். அதை சரி செய்வதற்கு ஒவ்வொரு வர்த்தக உரிமையாளர்களுக்கும் பத்தாயிரம் முதல் முப்பது ஆயிரம் வரை செலவு ஆகிறது. இதன் காரணமாக தீபாவளிக்கான திடீர் முதலீடுகளை செய்ய முடியாமல் பலர் சிரமப்படுகின்றனர். மேலும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகமும் பல இடங்களில் கடை முன்பு கழிவுநீர் கால்வாய்களை தோண்டி போட்டு சென்று விட்டனர். அதையும் சரி செய்தால் தான் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வருவார்கள். இதன் காரணமாகவும் தீபாவளி வர்த்தகம் குறைவாக உள்ளது. ஆகையால் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சோழவந்தானில் பல இடங்களில் கழிவு நீர் கால்வாய்களை தோன்டிய இடங்களில் தற்காலிகமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான் தீபாவளி முதல் நாள் இரவு ஓரளவு வர்த்தகம் நடைபெறும் இல்லை என்றால் வியாபாரிகள் தீபாவளி முதலீட்டுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்கு சிரமம் ஏற்படும் என்று தெரிவித்தனர். குறிப்பாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகையில்.., பொதுவாக தீபாவளி என்றாலே ஜவுளி மற்றும் தங்கநகைகள், வெள்ளி கொலுசுகள் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் வரை பெண்களிடையே ஆர்வம் இல்லை. மேலும் மதுரை போன்ற பெரு நகரங்களுக்கு சென்று விடுவதால் வியாபாரம் மந்தமாக உள்ளதாக கூறினர்.