வங்கக்கடலில் வருகிற 23ஆம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பிருப்பதாகவும், அதற்கு டானா எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது..,
மத்திய அந்தமான் கடல் பகுதியில் 5.8 கி.மீ. உயரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்க கடலில் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் திங்கட்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23 ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உருவாகும் புயல் சின்னத்திற்கு டானா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது..,
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன காரணமாக இன்று பெரும் பாலான பகுதிகளிலும், 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆரஞ்சு அலர்ட் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகியி மாவட்டங்களில் இன்றும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மொத்தம் 21 மாவட்டங்களில் மழை அதிகம் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
