மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கால்நடைகள் குறுக்கும் நெருக்கமாக சென்று விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, ஆர். எம். எஸ். காலனி பகுதியில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் காலை ஏழு மணி முதலே மாடுகளை சாலைகளில் விட்டுவிடுகின்றனர். இதனால், இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது, சாலையின் குறுக்கே கால் நடைகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மேலும், சாலையோரங்கள் மற்றும் சாலையின் நடுவில் ஐந்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் சர்வசாதாரணமாக படுத்து கொண்டு இருப்பதால், போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக போக்குவரத்து பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தச்சம் பத்து கிராமத்தை சேர்ந்த இளைஞர், வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் பணியினை முடித்து, இருசக்கர வாகனத்தில்திரும்பும் போது சோழவந்தான் ஆர். எம். எஸ். காலனி அருகில் மாடு குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் பல பத்திரிக்கைகளில் இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை இது தொடர்வது குறித்த செய்தி வெளிவந்துள்ள நிலையிலும் இன்னும் தொடரத்தான் செய்கிறது.
இன்னுமொரு உயிரிழப்பிற்காக காத்திருக்காமல், வெளியூரிலிருந்து இந்த சாலை வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் அடிக்கடி மாடுகள் நடமாடும் சாலை ( நடுரோட்டில் படுத்து உறங்கும் ) மெதுவாக செல்லவும் என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் அல்லது பேரூராட்சி காவல்துறை உதவியுடன் மாடுகளை பறிமுதல் செய்து கடும் அபராதம் விதித்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கூறினார்.