• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தங்கச்சிமடத்தில் குறவர் இன மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

தங்கச்சிமடம் ஊராட்சி காட்டுப்பகுதியில் வாழும் குறவர் இன மக்கள் தங்களுக்கு தமிழக அரசு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுவேளாங்கன்னி கோவில் காட்டுப்பகுதியில் குறவர் இன மக்கள் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு புறப்போக்கு நிலத்தில் குடிசை கட்டி வாழ்கிறார்கள்.

அடர்ந்த காட்டுக்குள் மணற்குன்றுகளுக்கு மத்தியில் ஓலைக்குடிசை மற்றும் தார்பாய் குடில்களில் வெயிலிலும், மழையிலும் பெரும்கஷ்டத்தோடு வசித்துவரும் இந்தக் குறவர் இன மக்கள் மின்சாரம், குடிநீரின்றி தவித்துவருகின்றனர். இரவுநேரங்களில் எப்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் வருமோ என்ற அச்சத்தோடு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து தூக்கத்தைத் தொலைத்துவிட்டு அனைத்தையும் சகித்துக் கொண்டு தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி வாழ்ந்து வரும் நிலையில் தங்கள் குழந்தைகள் பள்ளி சென்று படிக்க ஜாதிச்சான்று கேட்டு ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர்.

இதுதவிர காட்டுவழிப்பாதையில் பள்ளிக்கு நடந்துசெல்லும் பெண் குழந்தைகளுக்கு சமூக விரோதிகள் தரும் பாலியல் தொல்லைகளுக்கு விடிவே இல்லாததால் பாதுகாப்பற்ற பயணம் அவர்களின் படிக்கும் ஆர்வத்தை அழித்துவருகிறது.

இந்தநிலையில் அவர்களுக்கு சாலை, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அவர்களுக்கு முதல்வர் ஆனைப்படி, அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தங்கச்சிமடம் ஊராட்சி காட்டுப்பகுதியில் வாழும் குறவர் இன மக்கள் தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர் குயின்மேரியிடம் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்தக் கோரிக்கையை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர்