மதுரை அருகே இறைச்சிக்காக டெம்போ லாரியில் 20க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு செல்லும் அவலம்-நெரிசலில் மூச்சுத் திணறி கன்றுக்குட்டி இறந்த பரிதாபம்
நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை நாலு மணி முதல் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருவதும், அதனை வாங்கிச் செல்வதற்கு பொதுமக்கள் வருவதுமாக வார சந்தையானது நடைபெறும்.
இந்த நிலையில் வாடிப்பட்டியில் இறைச்சிக்காக மாடுகளை வாங்கி செல்பவர்கள் டெம்போ வேன்களில் இருபதுக்கும் மேற்பட்ட மாடுகளையும், அதன் கன்று குட்டிகளையும் அடைத்து கொண்டு செல்வதால் இட நெருக்கடியால் மூச்சு திணறி கால்நடைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 20க்கும் மேற்பட்ட மாடுகளையும் அதன் கன்று குட்டிகளையும் வாடிப்பட்டி சந்தையில் இருந்து வேனில் அடைத்துக் கொண்டு சென்றனர். மதுரை துவரிமான் 4 வழி சாலை அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த சமூக ஆர்வலர்கள் டெம்போ வேனை மடக்கி அதிலிருந்த மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பார்த்ததில் அதிர்ச்சியடைந்தனர்.
டெம்போ வேனில் சுமார் 20க்கும்மேற்பட்ட மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக டெம்போ வேனை நிறுத்தி கால்நடைகளை இறக்கச் சொன்னதில் ஒவ்வொரு கன்றுக்குட்டியாக கீழே இறக்கியதை பார்க்கும் போது கல்நெஞ்சும் கரைந்து விடும் போல் தோன்றியது.

இந்த நிலையில் வேனுக்குள் இருந்த கன்றுக்குட்டி ஒன்று இட நெருக்கடியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது மிகவும் வேதனைக்குள்ளாகி உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்.., தொடர்ச்சியாக வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து விலங்குகள் நல வாரியம் உரிய விசாரணை செய்து, செவ்வாய்க்கிழமை இந்த பகுதிகளில் வரும் வாகனங்களை மடக்கி சோதனையிட வேண்டும். அவ்வாறு அளவுக்கு அதிகமாக விலங்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.









