ஓ.ராஜாவிடம் வாங்கிய கடனை கொடுத்த பிறகும் மீண்டும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பெரியகுளத்தைச் சேர்ந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதி சேர்ந்தவர் நாகராஜன். இவர் பத்திரப்பதிவு எழுத்தாளராக உள்ளார். இவர் தனது மகன் தொழில் தொடங்குவதற்காக ஓ பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜாவிடம் 4 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு கோடியே 98 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், அதன் பின் கொரோனா தொற்றுக் காரணமாக பணம் கொடுக்க கால தாமதம் ஆகியது. இதனால் ஓ. ராஜா தன்னையும் தன் குடும்பத்திற்கும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில் தங்களது சொத்துக்களை விற்று ஓ.ராஜாவிடம் வாங்கிய நான்கு கோடி ரூபாய் கடனுக்கு 5 கோடியே மூன்று லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறுகின்றன.
இந்நிலையில், மேலும் 2 கோடி ரூபாய் கேட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தொந்தரவு செய்து அடியாட்களுடன் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக நாகராஜ் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருதரப்பிற்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் ஓ.ராஜா மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக ஆஜராகினர்.
இருவரிடமும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து புகார் அளித்த நாகராஜ் கூறுகையில் கடனைக் கொடுத்த பிறகும் மீண்டும் கடன் கேட்டு தன்னையும், தன் குடும்பத்தையும் மிரட்டி வருவதாகவும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு ஓ. ராஜா தான் காரணம் என கூறினார்.
மேலும், இது குறித்து ஓபிஎஸ் சகோதரர் யு.ராஜா கூறுகையில், தன்னிடம் கடனாக பெற்ற பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்தார்.