சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி பள்ளியில் ஆடிப்பெருக்கு விழா தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் “இயற்கை உரம் தயாரிப்போம் வீட்டில்… விவசாயத்தைக்காப்போம் நாட்டில்” என்று கருத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளி மாணவர் செல்வங்கள் தங்கள் வீட்டில் இயற்கை உரங்களைத் தயாரிப்பது பற்றி விளக்கிக்கூறி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

ஒரு வார காலம் விரதமிருந்து தாங்கள் வளர்த்து வந்த முளைப்பாரி கன்றுகளை மாணவிகள் சுமந்து வந்தனர். இறைவனுக்கு பொங்கலிட்டு படையல் படைத்து, புலியாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் , தப்பாட்டம் ஆடி முளைப்பாரிகளை கொண்டு வந்தனர்.

மழலைச்செல்வங்கள் கருப்புசாமி, முருகன், சிவன், அம்மன் வேடமணிந்து ஊர்வலமாக பள்ளி வளாகத்தை சுற்றிவந்தனர்.

முன்னதாக பள்ளிவளாகத்தில் வேளாண்துறை மாணவர்களால் உழவுக்கு ஏற்ற வகையில் தயார்செய்யப்பட்டிருந்த நிலத்தில் மாணவர்கள் வகுப்புகள் வாரியாக தங்கள் ஆசிரியர்களுடன் இணைந்து தானிய வகைகள் மற்றும் நவதானிய விதைகளை விதைத்து மகிழ்ந்தனர்.

இவ்விழாவிற்கு பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் அவர்கள் தலைமை ஏற்றார். இவ்விழாவிற்கான நிகழ்ச்சிகளை பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றப் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
