கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரில் கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் 33ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத்தலைவர் எம்.மோகன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்து சங்கம் சார்பில் செய்த சாதனைகள் குறித்து பேசினார். மாவட்ட தலைவர் ஏ.பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். மாநில கெளரவத் தலைவர் விஜய்நடராஜ், வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம் முன்னாள் கெளரவத்தலைவர் ராமானந்த், கெளரவத்தலைவர் சீதாராமன், மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து சங்க கட்டிடம் கட்ட உறுதுணையாக இருந்தவரும், தற்போது மறைந்த டி.வி.நடராஜன் உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து மாநில தலைவர் மோகன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் ஒன்னரை கோடி ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெற்று வருகிறது. சுமார் 40 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளனர். இவர்களுக்காக 90 சதவீதம் சாகுபடி இடுபொருட்களை அனைத்துமே எங்கள் சங்கம் சார்பாக செய்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் எங்கள் வியாபரத்திற்கு தேவையானவைகளை சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். மற்ற நாடுகளை விட இந்தியாவில் பூச்சிமருந்துகளின் பயன்பாடுகள் குறைவு ஆகும். காரணம் இன்னும் இந்தியாவில் விவசாயத்திற்கு இயற்கை உரங்களை நாம் உபயோகிக்கிறோம் என்று கூறினார். அதன்பிறகு மாவட்ட பொருளாளர் செந்தில் கந்தசாமி 2017-23 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர்.அப்புக்குட்டி ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இறுதியில் தண்டபாணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
