பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட கோனேரிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, எசனை அரசு தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இன்று (23.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து சமையலறை, சமைத்த பொருட்களை கழுவும் இடம், உணவுப்பொருட்களின் வைப்பறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் எவ்வளவு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது அதில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முறையாக உணவுப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, உணவுப்பொருட்களின் இருப்பு குறித்த பதிவேட்டினையும் ஆய்வு செய்தார்.
சமையலறைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும், உணவு மிகவும் தரமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
மூன்று பள்ளிகளிலும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உணவு சுவையாக இருப்பதாக சமையலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும், கல்வியில் மேம்படவும் இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டமாகும். நம் வீட்டுப்பிள்ளைகளுக்கு எப்படி சமைத்துக் கொடுப்போமோ அப்படி சமைத்து அவர்களுக்கு அன்புடன் பரிமாறுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், சமையலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
முன்னதாக முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள குழந்தை மையத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு குழந்தைகளுக்கு சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அந்த மையத்திற்குட்பட்ட பகுதியில் எத்தனை குழந்தைகள் உள்ளார்கள், அனைவரும் குழந்தைகள் மையத்திற்கு வருகின்றார்களா, அனைவருக்கும் சத்தான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றதா, கர்ப்பினித்தாய்மார்களுக்கு சத்துமாவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மகளிர் திட்ட இயக்குநர் அமுதா, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் .சாந்தாதேவி, நகராட்சி பொறியாளர் பாண்டியராஜன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், இமயவரம்பன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.