தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் காந்திநகர் காலனி 4வது தெரு குறுகிய தெருவாக உள்ளது. இத்தெருவின் பின்புறம் எச்.டி லைன் செல்லும் பாதையில் ஒருவர் வீடு கட்டியுள்ளார். அவர் எச்.டி லைனை மாற்ற மின்சார வாரியத்திற்கு மனு கொடுத்துள்ளார்.
குறுகிய தெருவான காந்தி நகர் 4வது தெருவில் இருதய நோயாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளனர். உயர் மின் அழுத்த லைனுக்கு இரண்டரை அடிக்கு உள்ளே சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உயர் மின் அழுத்த லைனை அமைக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர், மின்வாரிய உயர் அதிகாரிகள், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் அழுத்த மின் பாதையை அருகில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இப்பிரச்சினை குறித்து மின்வாரிய உயர் அதிகாரியிடம் கேட்டபோது உயர் அழுத்த மின் லைனை இத்தெரு வழியாக அமைத்தால் 3 போஸ்ட் போதும் என்றும், மாற்றுப்பாதையில் அமைத்தால் 15 போஸ்ட் தேவைப்படும் என்றார். பொதுமக்களின் பாதுகாப்பை முக்கியமாக கருதாமல் மின்வாரிய செலவை கணக்கில் கொண்டு இப்பகுதி பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி குறுகிய தெருவில் உயர் மின் அழுத்த லைனை அமைத்தனர். ஏற்கனவே இப்பகுதியில் உயர் மின் அழுத்த லைனால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.