• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி

Byவிஷா

May 31, 2024

உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனியார் பயன்பாட்டுக்கு தேவைப்படும் சிறிய ரக ராக்கெட்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சம் 300கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட ‘அக்னிபான்’ என்ற சிறிய ரக ராக்கெட்டை உருவாக்கியது. முப்பரிமாண (3-டி) பிரின்டிங் முறையில் இதன் செமி-கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள்விஞ்ஞானிகள் 45 பேரின் வழிகாட்டுதலில் 200 பொறியாளர்கள் கொண்ட குழுவினர் ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடியில் உள்ள தேசிய எரிபொருள் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமும் அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ளஅக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் அந்த ராக்கெட்டை சோதித்து பார்க்க கடந்த மார்ச் 22, ஏப்ரல் 6, 7, மே 28 என 4 முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினையால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், 5-வது முறையாக நேற்று காலை 7.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் வெளியிட்ட பதிவில்,
‘சொந்த ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் எங்களது அக்னிபான் ராக்கெட் ஆகும். உலகிலேயே முப்பரிமாண (3-டி)முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் கொண்ட ராக்கெட் அக்னிபான் மட்டுமே’ என்று தெரிவித்துள்ளது.