தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்தி 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகின. இதனை அடுத்து பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளன. இதில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் இதுவரை 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான விண்ணப்பப்பதிவு மே 6ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 20000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை 1,73,792 மாணவர்கள் நேற்று மாலை 6 மணி வரை பதிவு செய்துள்ளனர். இதில் 1,21,366 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 81950 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 2,28,122 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதைவிட உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
