தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 35 வயது பெண்ணின் மார்பில் வளர்ந்த 6 கிலோ கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் கேகே பட்டியைச் சேர்ந்தவர் முத்து(வயது 35). இவருடைய கணவர் பரமன் காது கேளாத காரணத்தால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. முத்து அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முத்துவின் இடது மார்பு பகுதியில் சிறிய கட்டி தோன்றி அது ஐந்து வருடத்தில் ஆறு கிலோ கட்டியாக வளர்ந்து உள்ளது. இதனால் முத்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். கடந்த ஒரு வருடமாக கட்டி மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில் 6 கிலோ கொண்ட கட்டியால் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 10 நாட்களாக மார்பு பக்கத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் ,தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். அவரை பரிசோதித்த அறுவை சிகிச்சை மருத்துவர்கள் துரித நடவடிக்கை எடுத்து மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில், அறுவை சிகிச்சை தலைவர் செலின் செபாஸ்டின்மேரி மற்றும் மருத்துவர்கள் கங்கா, கார்த்திகேயன், வைத்தீஸ்வரன், மயக்க மருந்து இயக்குனர் கண்ணன் போஜராஜ், உமாராணி ,ஜேசுதாஸ் கொண்ட மருத்துவக் குழுவினர் சிறப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அந்த ஆறு கிலோ கட்டியை அகற்றி, தற்போது அவர் எந்தவித சிரமமும் இன்றி நலமாக உள்ளதாக மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் தெரிவித்தார் .
இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டால் சுமார் ஒரு லட்சம் செலவாகும் என்றும், தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட முத்து கூறியதாவது தனக்கு உறவுமுறை யாரும் இல்லை என்றும், அப்பா அம்மா இல்லை என்றும் தனது கணவர் எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு மாற்றுத்திறனாளி என்றும் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் எனக்கு கடவுள் மாதிரி இருந்து அதிர்வு சிகிச்சை செய்து இப்போது நான் நலமாக உள்ளேன் அவர்களுக்கு நான் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்











; ?>)
; ?>)
; ?>)