• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா.., இன்று கோலாகல கொடியேற்றம்..,

Byகுமார்

Apr 12, 2024

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.21ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்.23ம் தேதி வைகையில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.12) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். ஏப்.19ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.20ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும்.

அன்றிரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். ஏப்.22ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஏப்.23ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதனை தொடர்ந்து அழகர் கோயில் திருவிழா 19ம் தேதி தொடங்குகிறது. ஏப்.21ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். ஏப்.22ம் தேதி அவருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை, ஏப்.23ம் தேதி அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10க்குள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.