மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களை முன்னெடுத்து மகளிர் நலன் போற்றும் அரசாக விளங்கி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வர்பவர்களின் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளின் மன அழுத்தத்தை மாற்றும் விதமாக சிறுவர் பூங்கா அமைக்க அறிவுறுத்தினார். இதன்படி முதற்கட்டமாக சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை சிவகங்கை நகரமன்ற தலைவர் துரை ஆனந்த், காவல்துறை கண்காணிப்பாளர்சிபி சாய் சௌந்தர்யன் ஆகியோர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் காவல்துறையினர் மற்றும் சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் இந்த புதிய முயற்சியினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.





