• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடங்குகிறது

Byவிஷா

Mar 7, 2024

நாளை மஹாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து இன்று சிவாலய ஒட்டம் தொடங்குகிறது. நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் இந்த ஓட்டம் நிறைவடைகிறது. இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வழியெங்கும் உள்ள 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
சிவாலய ஓட்டம் இன்று தொடங்கும் நிலையில் பக்தர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் வகையில் தங்களைத் தயார் படுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக சிவாலய ஓட்டத்தில் பங்கேற்பதற்காக புத்தாடைகள், துணிப் பைகள் உள்ளிட்டவைகளை வாங்கி வைத்துள்ளதோடு, வாகனங்களையும் பழுது பார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர். வாடகை வாகனங்களில் செல்வோர் வாகனங்களை புக்கிங் செய்து வைத்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் ஆட்டோ, கார், வேன், ஆம்னி பஸ்கள் போன்ற வாகனங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சிவாலய ஓட்ட நாளில் 12 சிவாலயங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், தடையில்லாத மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்பட பல்வேறு வசதிகள் ஆலயங்களில் செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று ஆலயங்களுக்கு வெளியே வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளும் காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளும் காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆலயப் பகுதிகளிலும் இந்து அமைப்புகள் மற்றும் ஆலய திருவிழாக் குழுக்கள் சார்பில் வழிகாட்டி பதாகைகள் மற்றும் வாழ்த்துப் பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை (8 – ந் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.