• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் மலர் கண்காட்சி துவங்கியது…

BySeenu

Feb 23, 2024

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விதமான மலர்கள் மலர்கள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக இந்த மலர் கண்காட்சியில் பெரிய மலர் கூடையில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், சிறுதானியங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுரங்கம், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாள், சந்திரயான், இசை கருவிகளுக்கு இடையே SPB, கேரட்டை உண்ணும் முயல், யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் பெள்ளி, ஆகியவை பார்வையாளர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தன. மேலும் இந்த கண்காட்சியில் போன்சாய் செடிகள், வெளிநாட்டு செடிகள், மூலிகை செடிகள், வீட்டில் வளர்க்கப்படும் கண் கவர் மலர்கள், டென்னிஸ் ஆடுகளம், கிரிக்கெட் வீரர்களின் செல்பி ஸ்பாட், ஆகியவையும் இடம்பெற்று இருந்தன. இந்த கண்காட்சியை பார்க்க வந்திருந்த அனைவரும் பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

மேலும் இந்த கண்காட்சியில் மலர் செடிகள் வளர்ப்பு மூலிகை செடிகள் வளர்ப்பு குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு நூறு ரூபாயும் குழந்தைகளுக்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் தற்காலிக உணவு விடுதிகளை அமைத்துள்ளன மேலும் இலவச குடிநீர் வசதியும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை குடும்பங்களுடன் வந்து கண்டுக்களிக்க வேண்டும் எனவும் நாள்தோறும் பல்வேறு குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் இங்கு யோகா பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.