• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

வள்ளலார் தினம் : வடலூரில் பக்தர்களுக்கு ஜோதி தரிசனம்..!

Byவிஷா

Jan 25, 2024

இன்று வள்ளலார் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள சத்தியஞான சபையில், ஏழு திரைகள் விலக்கப்பட்டு பக்தர்களுக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
உலக உயிர்களிடையே அன்பையும், அமைதியையும் ஏற்படுத்தும் நோக்கில் 1867ல் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையை வள்ளலார் அடிகளார் நிறுவினார். இங்கு தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. இறைவன் ஜோதி வடிவாய் உள்ளார் என எடுத்துரைத்த வள்ளலாரை இந்த ஜோதி தரிசனத்தில் மக்கள் தரிசிக்கின்றனர்.
சத்திய ஞான சபையில் கண்ணாடியை மறைக்கும் வண்ணம் 7 நிறங்களை கொண்ட 7 திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளது. தைப்பூச தினத்தில் மட்டுமே 7 திரைகளும் விலக்கப்பட்டு ஜோதி தரிசனத்தை காண இயலும். இந்த 7 வண்ண திரைகளும் அசுத்த மாயாசக்தி, சுத்த மாயாசக்தி, கிரியா சக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதிசக்தி என 7 வகையான சக்திகளை குறிப்பதாகும்.
இன்று காலை 6 மணி; காலை 10 மணி; மதியம் 1 மணி; இரவு 7 மணி; இரவு 10 மணி 26.1.24. காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனத்தை காணலாம். இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசம் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியஞான சபையில் ஆண்டு முழுவதுமே பசித்த வயிற்றுக்கு உணவிட அன்னதான தர்ம சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தர்மசாலையின் அடுப்பு என்றுமே அணைந்தது இல்லை. பசித்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் தினம் தினம் ஆகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஏராளமான தொண்டு அமைப்புகள் சார்பிலும் அங்கு அன்னதானங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. வடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் அன்னதான கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடலூருக்கு வரும் பக்தர்கள் வயிறு வாடாமல் பசியாறிச் செல்லலாம் என்பது வடலூரின் தனி சிறப்பு.