• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிரதமர் வருகை : சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..!

Byவிஷா

Jan 18, 2024

பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, சென்னையில் பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“பிரதமர் நரேந்திர மோடி (நாளை (19.01.2024) சென்னை, பெரியமேட்டிலுள்ள, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பிரதமரின் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமரின் வருகையை ஒட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் சென்னை, பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.