• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்.., ரூ.5.50லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க திட்டம்..!

Byவிஷா

Jan 5, 2024

வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் வளர்ச்சிக்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7, 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக, குறு, சிறு தொழில்துறை சார்பில் மாவட்டந்தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கடந்தாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகள் பயணம் மேற்கொண்டபோது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த சூழலில், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பணிகளை தமிழக தொழில்துறை தீவிரமாக செய்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

உலக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. தொழில்துறை, ஆட்டோமொபைல், எரிசக்தி துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.
தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில் வழிகாட்டி மையம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை பள்ளி, கல்லுரிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.