திருச்செங்கோட்டில் உயரழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை ஊக்கத்தொகை வழங்க கோரியும், புதிய மின் திட்டங்களை கேபிள் மூலம் சாலையோரம் செயல்படுத்த கோரியும் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் சுகந்தியிடம் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் மனு கொடுத்தனர்.
தமிழ்நாட்டில் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய இரண்டு நிறுவனங்களால் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டது. இதில் விவசாயிகள் நில மதிப்பு இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக திட்டம் துவங்குவதற்கு முன்பாக அனைத்து இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்ற உத்தரவை கடைபிடிக்காமல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன் நுழைவு அனுமதி கொடுத்து வேலை துவங்கும் போது தடுத்த விவசாயிகளை வருவாய்த்துறை காவல்துறையை வைத்து மிரட்டி கைது செய்து கம்பங்களை நட்டனர். அதன் பின்பும் முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், ஊக்கத்தொகை வழங்க வேண்டும், புதிய மின் திட்டங்களை புதைவிட கம்பிகள் மூலம் சாலையோரம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில்மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் தொழில்துறை அரசாணை எண் 54 படி பயிர்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் ஆழ்துளை கிணறுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் கம்பம் விழுந்த இடம் கம்பி செல்லும் இடங்களுக்கு அக்கிராமத்தில் அதிகபட்ச சந்தை மதிப்பீட்டை கணக்கில் கொண்டு 2013 நிலை எடுப்பு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம் ஆக வந்த விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி இடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.