• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்…

ByKalamegam Viswanathan

Jan 4, 2024

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார். எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, கல்வியில் தமிழ்நாடு தான் தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அதற்காக தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் அடுத்ததாக உயர்கல்வி படிப்பதற்காக கல்லூரிகளுக்கு செல்ல இருக்கின்றனர். மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்காகவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் நல்லமுறையில் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று பேசினார். மேலும், தேசிய அளவில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் 3ம் இடம் பிடித்த எஸ்.பி.கே பள்ளி மாணவி ஷிவானிக்கு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.