• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி கட்டக்குளம் ஊராட்சியில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் திணறும் பொதுமக்கள்… ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

ByKalamegam Viswanathan

Dec 31, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கட்டக்குளம் ஊராட்சியில் குடிநீர், சுகாதாரம் கழிப்பிட வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். கட்டக்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக குணசுந்தரி என்பவரும், ஊராட்சி செயலாளராக சுந்தரி என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன. ஆறாவது வார்டு மந்தை அருகே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார வளாகம் செயல்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

மாறாக கடந்த 2022-23 ஆம் நிதி ஆண்டில் மகளிர் சுகாதார வளாக உறுஞ்சிகுழி அமைப்பதற்காக 95 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகம் அருகே உள்ள சின்டெக்ஸ் தொட்டி கடந்த இரு ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். திடீரென பழுதடைந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக சின்டெக்ஸ் தொட்டியும் செயல்படவில்லை. மகளிர் சுகாதார வளாகமும் செயல்படாமல் இருந்த காரணத்தினால் பெண்கள் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் சாலையின் இருபுறம் மலம் கழிப்பதால் சுகாதாரக் கேடு உருவாகி வருகிறது.

அங்கு செல்லும் அவர்களின் சிலருக்கு பாம்பு, பூரான் போன்ற விஷஜந்துகள் கடித்து அதற்கும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து உடனடியாக கழிப்பிட வசதியும், குடிநீர் வசதியும் செய்து தரக்கோரி கேட்டுக் கொண்டனர்.