கோவை ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் வட்லக்கி எனும் பகுதியில் நேற்று முன் தினம் இரவு தமிழக வனப்பகுதியில் இருந்து கேரளா வனப்பகுதிக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் யானைகள் சென்றுள்ளது. அந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. அப்போது கூட்டத்தில் இருந்த சுமார் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனை அடுத்து உடன் வந்த யானைகள் இதனை காப்பாற்ற தொடர்ந்து பிளிறியபடி அங்கு நின்றுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கேரள வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இரவு நேரம் என்பதாலும் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் காலையில் மீட்பு பணியை துவங்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தொடங்கியது. ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில் தோண்டப்பட்டு சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது.
தற்போது அந்த யானை கோவை வனப்பகுதிக்கு இடம் பெயர செய்து தமிழக வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து வருகின்றனர்.








