• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஷாக் அடிக்குது, பாம்பு கடிக்குது எப்படி சார் வேலை செய்வோம்..?

BySeenu

Dec 9, 2023

கோவை ரயில்வே பணிமனையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், ரயில்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என கூறி ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம், கூட்செட் ரோட்டில் ரயில்வே பணிமனை செயல்பட்டு வருகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் இந்த பணிமனையில் நடைபெறுவது வழக்கம்.

கோவையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, ரயில்வே பணி்மனையில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக ரயில்கள் நிறுத்தப்படும் இடத்தில் தண்ணீர் தேங்கியதால் ஊழியர்கள் ரயில்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் ரயில்வே ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீரில் இறங்கி வேலை பார்க்கும் போது , அதில் கலந்துள்ள நச்சு பொருட்களால் உடல்பாதிப்பு ஏற்படுவதாகவும், தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் வருவதால் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் ரயில்வே பணி மனையில் தண்ணீர் புகுந்து சிக்கல் ஏற்படுவதாகவும், இதனால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீரில் இருந்து மின் ஒயர்களை தொடும்போது ஷாக் அடிப்பதாகவும், பெட்டியின் கீழ்பகுதிகளில் ஆய்வு பண்ணுகின்ற போது துணிந்து செயல்பட முடியவில்லை எனவும்
இந்த பிரச்சனையை ரயில்வே நிர்வாகத்தில் தெரிவித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். ஊழியர்கள் எதிர்ப்பை தொடர்ந்து அவர்களிடம் பேசிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தனர்.